Monday, December 31, 2012


பறவை அறிமுகம்


Indian Great Horned Owl (Bubo bubo)
கொம்பன் ஆந்தை


            

           பார்த்தாலே பயம் கொள்ள வைக்கும் கொம்பன் ஆந்தையை முதன் முதலில் சென்னை நன்மங்கலம் ரிசர்வ் முட் காட்டில் சில வருஷங்களுக்கு முன்பு பார்த்தேன்.அதுவும் ஒற்றையாக ஒரு கல் குவாரியில் பார்த்தேன். தற்போது சூலூர் ஊர்வேலங்காடு கல் குவாரியில் இரட்டையாகப்பார்த்தேன். ஆண், பெண்ணுக்கு வித்தியாசம் தெரியாது. பூபோ என அலறல் குரல் எழுப்பியும், கண்கள் உருட்டியும் பார்த்து பயத்தை ஏற்படுத்தும். இது பகல் முழுக்க கல் குவாரியில் ஓய்வு கொண்டு, இரவில் எலி, முயல், பறவை, ஓணான் போன்றவற்றை வேட்டையாடும். முதலில் பார்த்த போது அது தொந்தரவுக்கு உள்ளாகி குவாரியின் மறுபக்கம் பறக்க நான் கழுகு இனம் என நினைத்தேன். இரண்டடி உயரம் இருக்கும். பறந்து சென்று உட்கார்ந்த இடம் தெரியவில்லை. குத்து மதிப்பாக ஒரு குவாரி பாகத்தினை படம் எடுத்து வந்து கணனியில், உருப்பெருக்கி பார்த்த போது கொம்பன் ஆந்தை எனத் தெரிந்தது. இது காலையில் நிகழ்ந்தது. உடனே மதியம் 3 மணிக்கு மேல் சென்று புகைப்படம் எடுத்து வந்தேன். இரண்டு ஆந்தைகளைப்பார்த்து ரவசம் கொண்டேன். ஆந்தை என்றாலே நம்மை வசிகரிக்கக் கூடிய பறவை. அதைப்பற்றிய கட்டுக்கதைகள் உண்டு. பார்த்தால், அதன் குரல் கேட்டால் நல்லது இல்லை என்பது அபத்தம். யாராவது கோவைவாசிகள் கொம்பன் ஆந்தையை பார்க்க ஆவல் இருப்பின் என் கைபேசி எண்; 98421 06430 தொடர்பு கொள்ளவும். அழைத்துச்செல்கிறேன்.

Monday, December 24, 2012



  



 பறவை குணாதிசயம்


 பாம்புத்தாரா
Snake Bird or Darter
(Anhinga melanogaster)                 


        


பாம்புத்தாரா நீர்மூழ்கிக் கப்பலைப் போல நீருக்குள் நீந்தி மீனைப்பிடிக்கும். பிடித்துவிட்டால் நீர் பரப்புக்கு வந்து பல சமயம் மீனை இரண்டடி உயரத்துக்கு தன் தலைக்கு மேலே விசிறி விடும். மீனின் தலை பாகம் கீழ்நோக்கி வருமாறு பார்த்துக்கொள்ளும். அப்போது தான் மீனை விழுங்குவதற்கு எளிதாக இருக்கும். அலகிலிருந்து நழுவி விடாது. பொதுவாகவே கொக்கு, நாரை, மீன்கொத்தி, நீர்காகம் போன்ற மீன் உண்ணும் பறவைகள் அலகுக்குள் முதலில் மீனின் தலையைத்தான் செலுத்தும். பாம்புத்தாரா மீனை இரண்டடி உயரத்துக்கு தன் தலைக்கு மேலே விசிறி விடும் காட்சியை புகைப்படம் எடுப்பது மிகக்கடினம்.அதனால் நான் எழுதிய Diary on the nesting behavior of Indian Birds- நூலில் பாம்புத்தாராவின் இந்த வியக்கத்தக்க குணாதிசயத்தை நானே சித்திரம் வரைந்து வெளியிட்டேன். தற்போது தான் அதிஷ்டகரமாக இந்த புகைப்படம் கோவை பள்ளபாளையம் குளத்தில் கிடைத்தது. பறவை அன்பர்களே! சித்திரங்களையும், புகைப்படத்தையும் பார்த்து ரசியுங்கள். இதை விட நல்ல படம் எடுக்க முடிந்தால் எனக்கு sukubird@yahoo.comக்கு மெயில் செய்யவும்.

Thursday, December 20, 2012



பூச்சிகள் ராஜ்ஜியம்


 கட்டெறும்பும் அதன் பசுமாடும்
Ant and its Cowbug

 புகைப்படத்தில் பசு பூச்சி மெர்ன்பிரேசிட் (Cowbug Mernbracid) என்ற டெலங்கானா (Telengana) பறக்கும் பூச்சியை சீமகருவேல் மரத்தில்(Acacia) பார்க்கிறீர்கள். இந்தக் கட்டெறும்பு அதை என்ன செய்து கொண்டிருக்கிறது?  பசு பூச்சியிடமிருந்து பால் உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. எறும்புகளில் சில பூஞ்சை, சில எறும்பு, இலை, தாவரம், மற்றும் சில, பூச்சி உண்ணும். கூட்டைக்கலைத்தால் கடியுடன் ஃபார்மிக் அமிலத்தை உமிழ்ந்து கடித்த இடத்தில் எரிச்சலை உண்டாக்கும். குழு வாழ்க்கை ஸ்வராஸ்யம் நிரம்பியது. பசு பூச்சிகள் இலை, தண்டுகளில் உறிஞ்சும் தாவரரசமே எறும்புகளுக்கு இனிப்பு ரசமாகிறது. நாம் வீட்டில் கொல்லைப்புறத்தில் பசு மாட்டைக்கட்டி வைத்துக்கறப்பது போல் எறும்புகள் அவ்வப்போது தன் இலைக்கூட்டுக்கு பசு பூச்சியை இழுத்து வந்து இனிப்பு திரவத்தை உறிஞ்சும். இயற்கையில் ஆச்சர்யங்கள் நிறைய உள, எனவே இயற்கையை பேணிப்பாதுகாக்காவிட்டாலும் பரவாயில்லை, அதை சீரழிக்காதீர்கள். இயற்கையை அளவோடு நுகர்ந்தால் மகிழ்வோடு வாழலாம்.

Monday, December 17, 2012


பறவை அறிமுகம்

கதிர் குருவிகள்
(Warblers)

Paddy Field Warbler


கதிர் குருவிகள் குருவி அளவில் சிறியதாக இருக்கும். புதர்களில் மறைந்தும், சற்றே வெளிப்பட்டும் ஒரு இடத்தில் நில்லாது இடம் பெயர்ந்து கொண்டே இருக்கும். இருபது வகைகள் இருக்கும். இவைகளை இனம் காண்பது பரம கஷ்டம். புகைப்படத்துக்கு சிக்காது. கதிர்குருவி வழக்கமாக வரும் புதர் அருகில் மறைவாக பொருமையாகக்காத்திருந்தால் புகைப்படத்துக்கும் மாட்டும், அடையாளமும் கிடைக்கும். இவற்றின் வாழிடம் மற்றும் குணாதிசயங்களை வைத்து இனம் கண்டு பிடிக்கலாம். மேலும் பொதுவாக நிறம், பரிமாணம், கண்புருவம், வால் அமைப்பு, தனித்து, அல்லது ஜோடி என்பன வைத்து இனம் கண்டு பிடிக்கலாம். முதலில் பறவை கண்காணிப்புக்கு, தொலைநோக்கி தான் பிரதானம். ஒரு புதுப்பறவையை இனம் கண்டு, சலிம் அலி நூலில் அது பற்றி மேலும் விபரங்கள் படிக்கும் போது பரவசம் கொள்கிறோம். அன்று இரவு தலையணையில் முகம் புதைக்கும் போது கூட பறவையும், அதன் நளினஅசைவும், அழகும் நினைவில் ததும்பி வழிகிறது. பல நாட்களுக்கு மனதில் நினைவு மணக்கிறது. அது போல வயல்வெளி கதிர்குருவி (Paddy Field Warbler) என்னை பரசத்தில் மூழ்கடித்தது.

Sunday, December 16, 2012


பூச்சிகளின் ராஜ்ஜியம்

Caterpillar of psychid moth
(Clania crameri)

            பூச்சிகளின் ராஜ்ஜியம் மிக ஸ்வராஸ்யமானது. அவை 30000 வகை வரை நீளும். உங்கள் வீட்டைச்சுற்றி பார்த்தாலே போதும். பல பூச்சிகள் கண்ணில் படும். பூச்சி, புழுக்கள் இருந்தால் தான் உலகம் சரிவர இருக்கும். அவைகளைப்பார்த்து அருவருப்பு படாதீர். எனது வீட்டின் வெளி மாடிப்படிக்கட்டுக்குக்கீழ்புறம் ஸ்விட்ச் பெட்டிக்கடியில் எடுத்த புகைப்படமிது. இது ஒரு புழு. தன்னைச்சுற்றிலும் சின்ன, சின்ன குச்சிகளை சிலந்தி நூலைப்போல சுரந்து, வட்டமாக இணைத்துக்கொள்கிறது. இது புழுவுக்கு பாதுகாப்பைத் தருகிறது. புழு உட்புறம் வாழ்ந்து, எங்கு போனாலும் இந்த குச்சிக்கூட்டுடன் நகர்கிறது. உண்ணும் போது மட்டும் தலையை வெளியே நீட்டுகிறது. ஆரம்பத்தில் சின்ன முள் மரம், மற்றும் படத்தில் காண்பது போலத்தொங்கும். ஆனால் என் வீட்டு சைச்சிட் மாத் புழு ஏனோ இறந்து மூன்று மாதமாக அப்படியே தொங்கிக்கொண்டிருக்கிறது. நீங்களும் வீட்டைச்சுற்றி கவனியுங்கள். இயற்கையின் வினோதங்களை கண்டு பிடித்து பரவசம் கொள்ளுங்கள்.

Thursday, December 6, 2012


பறவைகள் இணையைக் கவர செய்யும் யுக்திகள்

                               வீட்டுக்கொல்லைப்புறத்தில் கண்ட காட்சி



பறவைகளில் ஆணினம் தன் காதலியை கவர பல யுக்திகளைக் கையாழும். காதலிக்கு இரை ஊட்டி விடும். அவள் முன்னே நாட்டியமாடும். குட்டிக்கரணம் அடித்துக்காட்டும். தன் இறகு வண்ணத்தைக்காட்டும்,கானம் பாடும், அழகிய கூடு கட்டி இணைக்கு காட்டும், தலை, கழுத்து அலகால் வருடி விடும்,ஓடிப்பிடித்து விளையாடும், காதல் சில்மிஷங்கள் பறவைகளிலும் உண்டு. கிளிகள் ஒருபடி மேலே போய் இணை இருக்குமிடம் மெதுவாக நகர்ந்து போய் உரசும், கண்களை உருட்டிக்காட்டும், விசிலடித்துக்கூப்பிடும், அருகில் வந்தால்  முத்தமிடும்.நம்மைப்போல், திரைப்படத்தில் வரும் கதா நாயகன், கதா நாயகி போல் எல்லா காதல் விளையாட்டுக்களும் பறவை சாம்ராஜ்ஜியத்திலும் உண்டு. இதை ஆங்கிலத்தில்  courtship என்பார்கள். ஒவ்வொரு இனப்பறவையும் ஒவ்வொரு விதமாக இணையைக்கவர யுக்திகளை கைவசம் வைத்திருக்கிறது. இந்த அந்தரங்க பறவை காதலை 51 இனப்பறவைகளில் நேர்பட கண்டு, ரசித்ததை Diary on the nesting behavior of Indian Birds- என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. விபரம் அறிய www.nestingbook.webs.com- தளத்திற்கு விஜயம் செய்யலாமே.

மீன் பிடிப்பு                     
ஏரி, குளங்கள் மாசுபாடு
                                     கண்ணம்பாளையம் குளத்தில் செத்து மிதக்கும் cat fish


நமது ஏரி, குளங்களின் அவலம் சொல்லி மாளாது. நீர் வணங்கக்கூடியது. ஆடிபண்டிகையில், மலர்களை நீர் பரப்பில் தூவி வழிபாடு நடத்துகிறோம். ஆனால் குளங்களில் வேதியல் சாயம் பூசிய வினாயகரைக்கரைப்பது, சடங்குகள் செய்து முடித்த பொருட்களை சேர்ப்பது, கட்டிடக்கழிவுகளைக்கொட்டுவது, சாக்கடை நீரை கலப்பது, சாயக்கழிவை விடுவது, மலஜலம் கழிப்பது,மருத்துவக்கழிவு கொட்டுவது என எல்லாவிதத்திலும் மாசுபடுத்தி விடுவது நடந்து கொண்டே இருக்கிறது. நீர் நிலை தான் நிலத்தடி நீர், மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆதாரம். பஸ் டிப்போ, பஸ் ஸ்டேண்ட், பவர் ஹவுஸ், குடிசைகள் அரசு, தனியார் என ஆக்கிரமிப்பு. தூர் வாறுவது கிடையாது. சாக்கடை நீரில் ஆகாசத்தாமரை சத்தாக வளரும். இத்தனை மாசுபாட்டிலும் வருடம் முழுக்க மீன் பிடிப்பு. இந்த விஷமேறிய மீன்களும் வியாபாரம் செய்யப்படுகின்றன. மக்களும் மசாலா மயக்கத்தில் உண்ணுகிறார்கள். இதை சுகாதரத்துறை கண்டு கொள்வதில்லை. குளங்கள் விஷமேறிக்கொண்டிருப்பதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அசட்டை செய்கிறது. PWD – யிடமிருந்து நகரக்குளங்களைப் பொறுப்பேற்ற மாநகராட்சி கையைக்கட்டிக்கொண்டு வாலா இருப்பது என்பதெல்லாம் எதைக்குறிக்கிறது? அரசு நிர்வாகங்கள் செயல் படுவதில்லை, எனக்காட்டுகிறது. இருகூர் குளத்தை, இருகூர் பஞ்சாயத்து சாக்கடை குளமாக்கியது, அவர்கள் சாதனை. அங்கிருந்து நுரைத்து பொங்கிப்போகும் சாக்கடை நீர், ஆச்சான் குளம் செல்கிறது. சூழல் ஆர்வலர் கரடியாகக்கத்தியும் பயனில்லை. இதே நிலை நீடித்தால் இன்னும் 5 அல்லது 10 வருடங்களில் இருகூர் குளம் மாதிரி அனைத்து நகரக் குளங்களும் சாக்கடைக் குளங்களாகும்.எந்தஉயிரினமும் விஷச்சாக்கடை குளங்களில் வாழாது. மக்கள் பயன்படுத்தும் கிணறுகளின் நீர் மஞ்சலாகி பயன்படுத்த முடியாத விஷ நீராகும். இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

Monday, November 26, 2012


மீன் பிடிப்பு
மீன் பிடிப்பு


சூலூர் மற்றும் கோவையைச்சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குளம், ஏரிகளில் மீன் பிடிப்பவர்கள் பரம்பரை மீனவர்களல்ல. அதனால் அடிப்படை மீன் பிடிப்பு அறிவு கூட இல்லாதவர்கள். அவர்களோடு கலந்து பேசித்தான் சொல்கிறேன்.  முன்பெல்லாம் படகு, பரிசல்களில் சென்று வலை வீசி மீன் பிடிப்பார்கள். இப்போது 5 அடி அகல வலைகளை நீரில் தட்டி மாதிரி மூழ்கடித்து குளத்தின் பரப்பு முழுதும் தெர்மக்கோல் துண்டுகள் மிதவைகளாகப்பயன் படுத்தி விரித்து விட்டு ஒரு நாள் கழித்து பரிசலில் தெர்மக்கோல் துண்டுகள் மிதவைகளோரமே சென்று நீரில் மூழ்கியிருந்த படல் (அ) தட்டியை எடுத்து வலையில் மாட்டிய மீன்களை ஒவ்வொன்றாக எடுத்து பரிசலில் போடுகின்றனர். நீரில் மறைந்திருக்கும் வலையில் நீர் காகம், முக்குளிப்பான், புள்ளி மூக்கு வாத்து, நாமக்கோழி, கூழைக்கடா போன்றவை நீரில் நீந்தி மீன், மற்றும் நீர் தாவரங்களை உண்ணும் போது மாட்டிக்கோள்கின்றன. வலையில் மாட்டி இறந்த இரண்டு நீர்காகங்கள் சுலூர் குளத்தின் வடகரையில் பார்த்தேன், பள்ளபாளையம் குளத்தில் வலையில் மாட்டிய முக்குளிப்பானைக்காப்பாற்றினேன். அமராவதி அணைப்பகுதி கரையில் அடிப்படை அறிவற்ற மீனவர்கள் பழுதான துண்டு வலையை காற்றில் விசிறி விட அதில் மாட்டிய கொண்டைக்குருவியை மீட்டேன். இது குறித்து மீன்வளத்துறைக்கு எழுதியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதே போல துண்டு வலையில் மாட்டிய மாட்டுக்கொக்கை சூலூர் குளத்தில் மீட்டேன். SACON, SANF, NGOs மீன்வளத்துறையோடு பேசலாமே. மேலும் மீன்பிடிப்பாளர்கள் பறவைகள் சாப்பிட்டு மீன் குறைந்துவிடுமென குளத்தில் பறவைகள் தங்காதவாறு பார்த்துக்கொள்கின்றனர். குளத்திலிருக்கும் கருவேல மரங்களை வெட்டி விடுவது, குளத்தின் நடுவே திட்டுகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது என பறவைகளுக்கு தீங்கு செய்கின்றனர், வருசத்தில் 6 மாதம் மீன் பிடித்து மீதமுள்ள மாதம் மீன் வளர நேரம் கொடுக்க வேண்டும். வருடம் முழுதும் மீன் பிடிக்க, பறவைகள் பசியோடு ஓரமாக இந்த பேராசை மனிதர்களைப்பார்த்துக்கொண்டிருக்கின்றன. என்ன தான் செய்வது? இந்த தெர்மக்கோல் வலை விரிப்பால் வலசை வரும் வாத்து இனங்கள் இந்த வலசைப்பருவத்தில் நமது சாக்கடைக்குளங்களில் இறங்கவில்லை.

Friday, November 23, 2012


பல்லுயிரினம்
                                                    
                                                       எனக்குந்தான் தாகமடிக்குது 

பல்லுயிரினம்

            இருபது வருஷங்களுக்கு முன்பு, நான் மேட்டுக்காட்டில் வீடு கட்ட ஒரு மனை வாங்கி அகழ்ந்த போது பூச்சி, புழுக்கள், பிள்ளப்பூச்சி, சிறு மூஞ்சூர், பாம்பு, உட்பட புலம் பெயர்ந்து போயின. எனக்கு தருமசங்கடமாகப்போயிற்று. அந்த இடம் பருவ மழைபெய்த காலத்தில் புன்செய் தானியங்கள் விளைந்த பூமி.ஐந்தரை ஏக்கர் நிலத்தில் 64 மனைகள் பிரித்ததில் நான் ஒரு மனை வாங்கினேன். மனிதனாகிய நான் குடியேற, பல உயிரினங்கள் குடிபெயர்ந்தன. சோகப்பட்ட நான் ஒரு சோகக் கவிதை எழுதி துக்கத்தை குறைத்துக்கொண்டேன். அந்த மேட்டாங்காட்டில் எண்ணி மூன்று மரங்கள் தான் இருந்தன. பிறகெல்லாம் சூரமுட்புதர்கள் தாம். தனி மனிதன் குடியேற்றத்துக்கே இந்த பாதிப்பு எனில் நீலகிரி, வால்பாறை, போன்று காடு கொன்று சாயா, ‘ஹாயா’ குடிப்பதற்காக தேயிலைதோட்டம் சமைத்தது, எப்பேற்பட்ட ஈவு இரக்கமற்ற செயல் என எண்ணிப்பார்க்கிறீரா? நான் 23 வருஷங்களுக்கு முன்பு மேட்டுக்காட்டில் குடியேறிய போதிருந்ததை விட என்னைச்சுற்றி பல்லுயிரினம் இப்போது அதிகம். அணில், வண்ணத்துப்பூச்சிகள், தும்பியினம், பறவையினம், வண்டினம், பூச்சியினம், புழுயினம் பெருகி என்னை மகிழ்ச்சியில் ஆழ்ந்து போக வைத்துள்ளன. எப்படி? கிட்டத்தட்ட நான் வைத்து வளர்த்த நூறு மரங்கள் ஆற்றும் பணி. 50 வகையான மரங்கள் உள்ளன. பூக்கள் வர்ஷிப்பு, வண்டுகள், வண்ணத்துப்பூச்சிகள் ஈர்க்கின்றன.பூச்சி, புழுப்பெருக்கம் பறவைகளை கவர்கின்றன.வலசை வரும் பறவைகள் கூட வருகை புரிகின்றன. விருக்ஷ்சங்கள் தேன், மகரந்தம், இலை, வேர், கனி என விருந்தோம்பல் செய்வதால் இப்படிப்பட்ட பல்லுயிர் பெருக்கம். அத்துடன் நீர் அருந்த கொள்கலன்கள் வைத்துள்ளேன். உயிரினம் என்னால் தொந்தரவுக்கு உள்ளானதை இப்படிப்பட்ட செயல் பாட்டில் அந்த 5 எக்கர் பூமியையே சுவர்க்கமாக மாற்றியமைத்தேன். நீங்கள் என்ன செய்தீர்கள?

Monday, November 12, 2012


தும்பி
Dragon Fly

















          தும்பிகள் மழைக்கு முன்னும், பின்னும் தாழப்பறந்து  திரிவதைப்பார்த்து ஆனந்தப்பட்ட காலமுண்டு.இப்போதுகைபேசியைவைத்துக்கொண்டு பேசியவாறு எதிரில் காணும் காட்சிகளை காணத்தவறுகிறோம். தும்பி பிடித்து விளையாடிய காலம் போய் மின்னனு காலமாய் போயிற்று. விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்து விட்டாலும், தாராள குணம் வளரவில்லை. தும்பியோடிருந்த போது இருந்த மகிழ்ச்சி மாநிடன் கண்டுபிடித்த மின்னனு பொருட்களோடு இருக்கும் போது இல்லை. இயற்கையோடு உறவாடுகையில் உற்சாகமும், ஆரோக்கியமும், மன அமைதியும் கிடைக்கிறது. அது ஏன்? இயற்கை எப்போதும் சரியானது. சிலசமயம் நமக்கு விளங்காது. புதிராக இருக்கும். தும்பிகள் பறந்து, பறந்து கொசுப்பிடித்து உண்ணும்.அதனால் நமக்கு நண்பன். ஆனால் இயற்கையில் கொசு படைக்கப்பட்டது, ஏன்? நம்மில் நல்லவர், கெட்டவர் போல………..  நான் விவசாய பல்கலைக்கழக சமுதாய வானொலியில் (பாகம் 1) பறவைகளைப்பற்றி அக்டோபர் 5-இல்   பேசியதை agri portel  e community radio programme-ல் இப்போதுகேட்டு மகிழலாமே. 

Friday, November 9, 2012

பூச்சிகள் ராஜ்ஜியம்


பூச்சிகள் ராஜ்ஜியம்
Scelio


                                                             Scelio

பூச்சிகள் கிட்டத்தட்ட 30,000 வகைகள் இந்தியாவில் மட்டும் உள்ளன. இவைகளில் பெறும்பாலும் தாவரங்களை நம்பி உள்ளன. எனவே விவசாயத்துக்கு கேடு. அதே சமயம் நன்மை பயக்கும் பூச்சிகளும் உள்ளன. நம் சமுதாயம் போலத்தான் அங்கும் உள்ளது. வெட்டுக்கிளிகள் தாவரங்களை உணவாக்கிக்கொண்டு பல்கிப்பெருகுகின்றன. அதனால் பயிர்கள் வளம் குறைகிறது. நம் எதிரிவெட்டுக்கிளிகளின் பெருக்கத்தைக்குறைக்க எல்லாம் வல்ல இயற்கை ஸ்சிலியோக்களைப்படைத்திருக்கிறது. வெட்டுக்கிளிகளை மைனாக்கள் உட்கொண்டு நமக்கு நன்மை பயக்கின்றன. வெட்டுக்கிளிகளுக்கு எதிரி ஸ்சிலியோ. அதனால் ஸ்சிலியோ நமக்கு மைனாவைப் போல  நண்பன். நம் எதிரிக்கு எதிரி நம் நண்பனாகிறான். வெட்டுக்கிளிகள் தாவரங்களில் ஏராளமான முட்டைகளை இடுகின்றன. அந்த முட்டைகளுக்கு ஒட்டுண்ணியாக இந்த ஸ்சிலியோக்கள் உள்ளன. பூச்சிகளின் ராஜாங்கம் நீங்கள் நினைப்பது போல அருவருப்பானது அல்ல. ரொம்பவும் ஸ்வராஸ்யமானது. இதோ நமது நண்பர் ஸ்சிலியோ புகைப்படத்துக்கு முகம் காட்டியுள்ளார்.

Thursday, November 8, 2012

வண்ணத்துப்பூச்சி



Plain banded awl  வண்ணத்துப்பூச்சி
(Hasora vita)



இது ஸ்கிப்பர் குடும்பத்தைச்சார்ந்தது. அதி காலையில் சூலூர் குளத்தின் வடக்குப்புற அவன்யு’---வில் சந்தித்த ஸ்கிப்பர் வண்ணத்துப்பூச்சி பற்றி சொல்கிறேன். இதை சிலர் மாத் (moth) என தவறாகக் கனித்து விடுவர். 'மாத்' எனும் வண்ணத்துப்பூச்சிஇனம் இரவு நேரங்களில் உலாவும்.கொஞ்சம் பனி விழும் போது வண்ணத்துப்பூச்சிகளுக்கு சுறுசுறுப்பு குறைவு, ஏனெனில் சூரியவெப்பம் அதன் உடம்பில் ஏறவில்லை. அந்த நேரத்தில் காமிரா கண்களுக்கு மாட்டும். இந்த ஸ்கிப்பர் ஒரு அங்குளம் தான் இருக்கும்.மலர் தாவரத்தில் அமர்ந்திருந்த போது எடுத்தேன். த் தாவரம் இந்த ஸ்கிப்பருக்கு உணவுத்தாவரம்.  இந்த இனம் அதிக சுறுசுறுப்பு பறத்தலால் இப்பெயரை வைத்து விட்டனர். ஸ்கிப்பர் பொருத்தமான பெயர். இது அதிகாலை மற்றும் அந்தியில் துறுதுறு’. இவைகளை சந்திக்க அதன் உணவுத்தாவரங்களைக்கண் வையுங்கள். மேற்குத்தொடர்ச்சி மலையோரப்பகுதிகளில் காணலாம். வண்ணத்துப்பூச்சிகளுக்கு இன்னும் தமிழில் பெயர் பட்டியல் இல்லை. முட்டை, புழு, கூட்டுப்புழு, வண்ணத்துப்பூச்சி என நான்கு அவதாரம் எடுக்கிறது. எனக்கு ஏன் பறவைகளையும், வண்ணத்துப்பூச்சிகளையும் பிடிக்கிறது? அவைகளின் அழகு வண்ணங்களும், நளினமான அசைவுகளும், அவற்றின ரம்மியமான வாழிடங்களும், கூவும் பாடல்களும்(பறவையில்) மனதை மயக்குகின்றன. இவை பூமியெனும் கிரகத்தில் உலாவும் தேவதைகள். ரசனை இயற்கை மீது இருக்க வேண்டும். நீங்கள் கண்டு பிடித்த உபகரணங்கள் மீது அல்ல!

வண்ணத்துப்பூச்சி


Lemon Pancy
(Junonia lemonias)

வண்ணத்துப்பூச்சி வாழ்கையில் பெறும்பாலும் சொற்ப மாதங்களில் நான்கு அவதாரமும் முடிவுக்கு வந்து விடும். இருப்பினும் நம்மைப்போல கவலைப்படுவதில்லை. ‘துறுதுறு’  வென மென்மையாக சிறகடித்து நம்மைக்கிரங்க அடிக்கின்றன. இவையும் பறவைகளைப்போல வலசை போகும். குடும்பம் உண்டு. இயற்கை எத்தனை விதமான வண்ண சேலைகளை நெய்திருக்கிறது! பேன்சிக்கள் நிம்பாலிட்ஸ்(Nympalids) குடும்பத்தை சார்ந்தவை. ஆறு கால்களில் முதல் இரு கால்கள் குட்டை, அதனால் பயனற்றது. இப்பெயர் பொருத்தமானது தான். இதை பூந்தோட்டம், வனவெளி, திறந்த விவசாய நிலங்களில் காணலாம். இறக்கையில் நான்கு கண்கள். பேன்சிகள், பீக்காக் பேன்சி, க்ரே பேன்சி, சாக்லெட் பேன்சி, யெல்லோ பேன்சி, ப்ளூ பேன்சி எனப்பல வகைகளில் இந்த வகை வண்ணத்துப்பூச்சி சாதரணமாக பார்க்கக் கூடியது.சிறு வயதில் வண்ணத்துப்பூச்சிகளை துரத்தினீர்களே! அது ஏன் மறந்து போனது? அப்போதிருந்த ஆனந்தம் இப்போது ஏன் தொலைந்து போனது?

Friday, November 2, 2012

திசை மாறிய பறவை


பூநாரை
Greater Flamingo
(Phoenicopterus roseus)

           

 சூலூர் குளத்தில் பூநாரை வந்தது எல்லோருக்கும் வியப்பு. இது முழு வளர்ச்சி பெறவில்லை. இறகு ஓரங்கள் குங்கும நிறம் இன்னும் வரவில்லை. ராணே வளைகுடாவிலிருந்து வந்திருக்கலாம். இதற்கு பிரியமானது உப்பங்கழிகளும், கடல் ஓரங்களும், ஆனால் நான் பூநாரைக் கூட்டங்களை கூந்தகுளத்திலும் அதன் சுற்று வட்டார சில குளங்களிலும் பல முறை நண்பர்களோடு பார்த்து ரசித்திருக்கிறேன். இது கோடியக்கரை, கன்னியாகுமரி, இராமனாதபுரம் பகுதிகளுக்குப் போகவேண்டியது தான். தனது கூட்டத்தோடு சேர்ந்து விடும். அதற்காக பலம் பெற பொன்னாங்கன்னி கீரை தீடைக்குள் தன் மண்வெட்டி போன்ற அலகை நுழைத்து, நுழைத்து பூச்சி லார்வா, புழு, சேற்றுக்தாவரங்களின் விதைகள் உண்ணுகிறது. நீலம் புயல் உருவான சமயம் இந்த இளைஞரை தடுமாற வைத்து, திசை மாற்றியிருக்கலாம். இவை லங்கா, இந்திய துணை கண்டத்தில்  உலவும் பறவைகள். பூநாரை பார்க்காத கோவை வாசிகள் பார்க்க அதிஷ்டமடித்தது. இவை குழு வாகப்பறக்கும் பொழுது ஆஹா! ‘V” வடிவில் போகும். சுவர்க்கம் இங்கு தான் தோழா! ஆயிரக்கணக்கில் குறை நீருக்குள் இரை தேடும் போது முனகல் ஒலி கேட்டிருக்கிறீர்களா? பூநாரை கூட்டத்தைக்காண இந்த வலசைப்பருவத்தில் மேலே சொன்ன இடங்களுக்கு விரையுங்கள்.

பறவை அறிமுகம்


மயில் உள்ளான்
Painted Snipe
(Gallinago gallinago)

                சூலூர் ராமச்சந்திரா குளத்தில் இந்த வலசைப் பருவத்தில் பார்த்தேன். ஜோடியாக உலாவியது. இவை உள்வலசை போகும். நான் தனிமையில் இருந்தேன். ! மயில் உள்ளானே! நீயும் நானும், ஊருக்கு வெளியே இந்த அலாதியான, அழகான, குளுமையான குளத்தில் இருந்தது மகிழ்ச்சி பொங்கிய நிமிஷங்கள். புள்ளும், புதரும், சேறும் நிறைந்த இடத்தில் நீ தேடுவது புழு, நத்தை, தாவரத்தண்டு தானே! மூக்கா இது! நீளமான மூக்கு, சேற்றில் விட்டுக்கிளறத்தானே! உன் இனத்தில் பெண் ராஜ்யமாமே! குரல் போத்தலில் (bottle)காற்று துவது போல என்ன இனிமை! புகைப்படத்தில் பார்ப்பது பெண். ஆண் தான் பறவையினத்தில் அழகு. ஆனால் இந்த இனத்தில் நேர் மாறாக இருக்கும். பெண் பறவை பல ஆண் பறவைகளுடன் உறவு வைக்கும். இவை லங்கா மற்றும் இந்திய துணைக்கண்டத்தில் உலவும். மீண்டும் எப்போது சந்திப்போம்?



Tuesday, October 16, 2012

வலசைபறவை


சின்ன உப்பு கொத்தி
Lesser Sand Plover
(Charadrius mongolus)


                
இந்த குழுப்பறவைகள் லடாக்,சிக்கிம்-லிருந்து எனது சூலூர் கிராம ராமச்சந்திரா குளத்துக்கு வந்திருக்கிறது எனில் வியப்புத்தான். சின்னஞ்சிறிய பறவைகள் மழை, வெய்யில், புயல் எனப்பாராமல் எத்தனை தொலை கடந்து வந்திருக்கிறது பாருங்கள். வழியில் வல்லூறு, பருந்து துரத்தியிருக்கும். எத்தனை இரவுகள், எத்தனை பகல்கள் ஆயிற்றோ! தடத்தில் நண்டு, புழு, மணல் வெட்டுக்கிளி கிடைத்திருக்கலாம். பசியுடனும் பறந்திருக்கலாம். வலசை உயிருக்குத் துணிந்த தேடல்.இவை மற்ற உள்ளான், மோதிரக்கோழிகளோடு குளக்கரையோரம் துறுதுறுவென இரை தேடியது கண்டு நானும் நண்பர் விஜயகுமாரும் கண்இமைக்காமல் ரசித்தோம். இதன் தலையும், அலகும், கால்களும் மற்றும் இரை தேடல் விதமும் இன்ன இனம் என தெரியப்படுத்துகிறது.

வலசைபறவை


வலசை(Migration)
கொசு உள்ளான்
Little Stint
(Calidris minuta)

Little Stint
ஐரோப்பா மற்றும் சைபிரியாவிலிருந்து கோவை, சூலூருக்கு வருகை புரிந்த  கொசு உள்ளான் குழுவே வருக! சனிக்கிழமை 13.10.2012 அன்று அதிகாலை நானும் நண்பர் விஜயகுமாரும் ராமச்சந்திரா குளத்தில் வரவேற்றோம். சிங்கைக்குளத்தில் முன்பே பார்த்தேன். ஆனால் வரவேற்புக்கு தொலைவில் குழு இருந்தன. நிழற்ப்படத்துக்கு நிற்கவுமில்லை. இத்தனை சிறியவர்கள் எப்படித்தான் ஐயாயிரம் மைல்களுக்கு மேல் பறந்து வருகிறார்களோ! வலசை ஒரு புதிர். நீர்கரை ஓரங்களில் நடந்தும், ஓடியும், நத்தை, நீர்ப்பூச்சி, சங்குப்பூச்சி உண்ணும். குழு நீர் பரப்பின் மீது துரிதமாகவும், நெருக்கமாகவும், வளைந்து, ஒன்றுசேர்ந்து திரும்பிப்பறக்கையில் சூரியஒளியில் சின்னப்பறவைகளின் அடிப்பாகம் பளீரிடும்,அழகைச்சொல்ல வார்தைகள் இல்லை. ரஷ்யாவில் 9.8.77ல் காலில் வளையமிட்டது தமிழ்நாடு கோடியக்கரைக்கரையில் 25.8.90 அன்று காணக்கிடைத்தது.  

Thursday, October 11, 2012

பிற உயிரினம்


பழம் திண்ணி வொளவால்
(Flying Fox)


 வொளவால், பறவை இனம் என்று நினைப்பவர் உண்டு. இது பாலூட்டி இனம். இவைகளை கோவை சிதம்பரம் பூங்காவில் பார்க்கலாம். பல வருடங்களுக்கு முன்பு, அலுவலகம் விட்டு மாலைநேரமானால் பூங்காவுக்கு சென்று விடுவேன்.வொளவால்களின் சேட்டைகளைப்பார்த்துக்கொண்டேயிருப்பேன். வேறு கவனம் எங்கும் சிதறாது. இதற்கு பதஞ்சலி அட்டாங்க யோகாவில் தாரணா என்று பெயர். இவை பகல் பொழுது முழுதும் பெரிய உயர்ந்த மரங்களில் தலைகீழாகத்தொங்கிக்கொண்டு தூங்கும். மாலை மயங்கியதும் இவை மேற்கு, தெற்கு திசைகளில் பறந்து செல்லும். திகில் சினிமாவில் பாழடைந்த கோட்டை, இரவும் பகலும் சந்திக்கும் வேளையில் வொளவால்கள் பறந்து போவது போல போகும். செவ்வானம் கருத்துக்கொண்டு வர,வர வொளவால்கள் உயர சற்று சாய்ந்த கோணத்தில் பக்கவாட்டில் பறந்து போவது பார்க்க எனக்கு ரம்மியமாகத்தெரியும்.இவை பழங்கள் மட்டுமே உண்ணும். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் பழமரங்கள் இருப்பதால் அதை நோக்கிப்போகின்றன. இது பெரியது. முகம் நரி போல இருப்பதால் இதற்கு  Flying Fox  எனப்பெயர். வருஷத்தில் ஒரு குட்டி ஈன்று மரத்தில் தலை கீழாகத்தொங்கியவாறு பாலூட்டும். இவை அல்ட்ராசானிக் ஒலியைப்பயன்படுத்தாது. பகலிலும் இரவிலும் பார்வை தெரியும். நீர் நிலைகளில் நீர் குடிக்கும். இதன் வாழிடச்சூழலை சீரழிக்கும் விததில் வயதான பெரிய மரங்களை வெட்டுவது, இவைகளை அடித்து திண்ணுவது போன்ற செயல்களை மனிதன் நிறுத்திக்கொள்ளவேண்டும். நிழற்படம்; நண்பர் சிவப்பிரஷாத்.

Monday, October 8, 2012

பறவை அறிமுகம்


அன்றில் பறவை
Black Ibis (Pseudibis papillosa)

தண்மதிக் கண்ணியி னானைத் தையல்நல் லாளோடும் பாடி
உண்மெலி சிந்தைய னாகி உணரா வுருகா வருவேன்
அண்ண லமர்ந்துறை கின்ற ஐயா றடைகின்ற போது
வண்ணப் பகன்றி* லொ டாடி வைகி வருவன கண்டேன்
     கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.
                                   திருவாரூர் பதிகம்அப்பர் தேவாரம். 4-ம் திருமுறை
                                                  
பகன்றி எனில் அன்றில் Black Ibis (Pseudibis papillosa) பறவை. 5-ம் நூற்றாண்டிலேயே அப்பர் தொலை நோக்கி இல்லாமல் பல பறவைகளை தேவாரத்தில் பதிவு செய்துள்ளார். இப்பறவைகள் ஆணும் பெண்ணுமாக புன்செய் நிலங்களில் இரை தேடும்.  மாலை நேரங்களில் நீர் அருந்த நீர் நிலை நாடிச்செல்லும். உயர்ந்த பனை,தென்னை மரங்களில் தங்கும். இணையில் ஒன்று மரித்தால் மற்றது உயிர் வாழாது. அதனால் இலக்கியவாதிகளுக்கு இதன் மேல் காதல்.  உயர்ந்த மரத்தில் பெரிய மேடை  போல குச்சிகளை வைத்து கூடு கட்டும். வரண்ட புல்வெளி, தரிசு நிலங்களில் இரை கிடைக்கும் வரை அங்கேயே இருக்கும். நான் இப்பறவைகளை கூந்தகுளத்தில்  பார்த்து  ரசித்துள்ளேன்.